வாதம், பித்தம், கபம் என்றால் என்ன?
பஞ்சப்பூதங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து பூதங்கள் பல்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. இதன் கூட்டுறவில் ஒன்று அல்லது மற்றொன்றின் மிகுதியால் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை பல்வேறு வடிவங்களை பெற்றுள்ளன. இவைகளை வைத்துத்தான் மருத்துவ உபயோகத்துக்காக மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. அவைகள் வாதம், பித்தம், கபம் ஆகியவையாகும்.
வாதம் வாயுவோடு ஆகாயத்தையும் மற்றைய பூதங்களை சிறு அளவிலும் பெற்றுள்ளன. பித்தம் அதிக தீயுடன் குறைந்த நீரையும் பூதங்களை சிறு அளவிலும் பெற்றுள்ளன. கபம் அதிக நீருடன் குறைந்த நிலத்தையும் மற்ற பூதங்களின் சிறு அளவையும் பெற்றுள்ளன.
நிலத்தால் வாசனையும், நீரால் ருசியையும், தீயால் நிறமும், காற்றால் ஸ்பரிசமும், ஆகாயத்தால் சப்தமுண்டாம். சுவை ஆறு வகைப்படும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்பனவாகும்.
இவற்றில் இனிப்பு 6 வீத பலத்தையும், புளிப்பு 5 வீத பலத்தையும், கசப்பு 4 வீத பலத்தையும், உவர்ப்பு 3 வீத பலத்தையும், துவர்ப்பு 2 வீத பலத்தையும், கார்ப்பு 1 வீத பலத்தையும் கொடுக்கக்கூடியது.
வாதத்தை இனிப்பு, புளிப்பு உவர்ப்பு பதார்த்தங்களும். பித்தத்தை இனிப்பு, கைப்பு, துவர்ப்பு பதார்த்தங்களும், கபத்தை கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு பதார்த்தங்களும் அடக்க கூடியது.
ஆனால் எதிரான சுவையுள்ள பதார்த்தங்கள் அவைகளை விருத்தி செய்யக்கூடியன. இப்பதார்தங்கள் மீண்டும் உஷ்ணம், குளிர்ச்சி என இருவகை குணங்களையுடையன பிரிக்கப்படும்.
இவ்வறுசுவைகளையுடைய உணவை நாம் சாப்பிட்டால் அது வாய், இரைப்பை, குடல்களில் சீரணமாகி தசையணுக்களில் கலந்து எறியப்படுகின்றன. வாய் முதற்கொண்டு உணவிலுள்ள வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் சரீரத்தில் ஒருவித இரசாயன மறுதலடைந்து அதன் மூலமாக உண்ட உணவானது சத்து, தசை, அசத்ததாக மறுதலைடைகிறது.
இம்மாறுதல்களின் பயனாக இனிப்பு வாயிலும் இரைப்பையில் புளிப்பு இரைப்பையில் சிறுகுடலின் மேற்பாகத்திலும், கார்ப்பு குடலின் கீழ்பாகங்களிலும் வேலை செய்கின்றன. இவைகளில் இனிப்பு குளிர்ச்சியான செய்கைகளையும் மற்றவை சிறிது சூடான செய்கைகளையும் உடையவை.
இவ்வாறு உணவு அல்லது மருந்து சரக்கு மேற்கூறப்பட்ட விதிக்கு புறம்பாக அவைகளுக்கு உரித்தான வேறு தோராய குணத்தையும் பெற்றிருக்கலாம். உதாரணமாக கடுக்காய் கரிப்பு நீங்கலாக மற்ற 5 சுவைகளை கொண்டுள்ளது. நெல்லிக்காயையும் கடுக்காயைப்போல எல்லா சுவையையும் கொண்டுள்ளது. கடுக்காய் அதிக துவர்ப்புடையது. நெல்லிக்காய் அதிக புளிப்பு சுவையுள்ளது. கடுக்காய் பேதியை உண்டாக்கும். நெல்லிக்காய் சிறுநீரை பெருக்கி பேதியை கட்டும். இவை இரண்டும் திரிதோஷங்களை கண்டிக்கக்கூடியது. அதாவது முறை தவறிய தாதுக்களை தத்தம் நிலையில் கொண்டுவரும். இவ்வாறு உணவுப்பொருள்கள், மருத்துவ சரக்குகள் ஆகியவற்றின் குணங்களை நோயுள்ள நோயில்லாத காலங்களிலும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகும்படி நன்கு ஆராய்ந்து வகுத்துள்ளனர்.
வாதம்
வாதம் என்பதே வாயு, வாயு என்பது உயிரைக் குறிப்பதாகும். ஓரணுப்பொருளில் அது அணுசக்தியாக விளங்குகிறது. இதுவே உயிர் சக்தி.
சிக்கலான உடற்கூற்றில் இது நரம்புகளை இயக்கும் சக்தியாகவுள்ளது. பித்த கபங்களுக்கு சக்தியை கொடுப்பதும் வாயுவே. இதுவே அவற்றிற்கு தலைமையானது உற்சாகமூட்டுதல் மூச்சு இழுத்து விடுதலை ஒழுங்குபடுத்துதல், அணுக்களின் வேலையை விருத்தி செய்வது பலவித தாதுக்களை உண்டாக்குவது காப்பாற்றுவது. கழிவுப்பொருட்களை உடலினின்று சரிவர வெளியாகுதல் முதலியன வாயுவின் இயற்கையான வேலையாகும்.
பித்தம்
மனிதர்களின் உடலில் பல பொருட்கள் இரசாயன மாறுதல் அடைய உண்டாக்கும் உடல் தீயாக இருப்பதாகும். வயிற்றில் சீரண சக்தியையும், கல்லீரல் மண்ணீரல்களில் இரத்தத்திற்கு நிறத்தையும், இருதயத்தில் தங்கி அறிவையும் ஞாபக சக்தியையும், கண்ணின் கருவிழி மூலம் பார்வைத்திறனையும், தோலுக்கு நிறத்தையும் தருகின்றது. இப்பித்தம் உஷ்ணம், தீ, சூரியன் முதலியவற்றுக்கு ஒப்பாகும். உடலில் பித்தம் இயற்கையான அளவில் குறையுமானால் சீரணசக்தி கெடும். இரத்தித்தின் நிறம் மாறுதலைடையும், பார்வை குறையும், பித்தம் அதிகமானால் உடல் நிறம் வெளுக்கும்.
கபம்
வயிற்றில் உணவை ஈரமாக்கி செரிமானத்திற்கு எதுவாக செய்யும், இருதயம் சூடேறாது தடுப்பதற்கும், நாவின் ருசியையும் ஈரத்தையும் கொடுத்து காக்கவும், மூளையோடுள்ள உணர்ப்புப்பொறிகளை வலுவலுப்பாய் வைத்திருக்கவும் கபம் வேலை செய்கிறது.
காலமறுதல்கள், கருத்தரிக்கும் விதம், கருப்பையின் வளர்ச்சி, தாயின் உணவு, பழக்கவழக்கங்கள், பிண்டத்தை உற்பத்தி செய்யும் கபத்தன்மைகளின் சம்பந்தமிகுதி முதலியவைகளை பொறுத்தே குழந்தையின் உற்பத்தியும் பிறவிக்குணங்களும் வாத, பித்த, கபமாகவும் இவற்றின் தொந்தங்கள் மூவித தன்மைகளாவும் பிரிக்கப்பட்டுள்ளன.
கபத்தின் தன்மைகள்
கப தன்மை மிகுந்தவர் நல்ல செழுமையான ஊட்டம் பெற்ற பசையுள்ள மிருதுவான அழகிய உடலும் வலிமையையும் நிதானமுள்ள கை, கால்கள் பெற்றவாயிருப்பர். பசி, தாகம், உஷ்ணம், வியர்வை முதலியவற்றால் பிறரைவிட சிறிது குறையவே துன்புறுவர். சுத்தமான தொனியையும் பளிங்கு போன்ற நிறத்தையும் பெற்றிருப்பர். நன்கு படித்தவராயும், ஓரளவு செல்வந்தராயும், பல சிற்றின்ப இச்சையும் உடையவராயிருப்பர், சாதுவாகவும் நீண்ட ஆயுளை பெற்றிருப்பர் இதற்க்கு உத்தமப் பிரகிருதி என்பது பெயர்.
பித்தத்தின் தன்மைகள்
பித்தத்தன்மை மிக்கவர் உஷ்ணத்தை தாங்கமாட்டார்கள். பசிதாகத்திற்கு சுலபத்தில் அடிமைப்படுவதோடு இளமையிலேயே நரை, சுருக்கம், வழுக்கைத்தலை முதலியவற்றுக்கு ஆளாகின்றனர். அதிகப்பசியுள்ளவராயும் மிகுதியாக உண்பவராயுமிருப்பர். மிக்க அதிக கஷ்டத்தை தங்கமாட்டார்கள். தலை, தோல் முதலிய இடங்களில் ஒருவித துர்நாற்றம் இருக்கலாம். உலக அறிவு, சாஸ்திர அறிவு, வாழ்க்கை முதலியவற்றில் தடுத்தரமானவராயிருப்பர். இதற்கு மத்திமப் பிரகிருதி என்பது பெயர்.
வாதத்தின் தன்மைகள்
வாதத்தன்மையுடையவர் வறண்ட தோலையும் மெல்லிய உடலையும் ஈனத்தொனியையும் உடையவராயிருப்பார். பேசும் திறன் வாய்ந்தவர். எக்காரியாதையும் அவசரமாக துவங்கி அதனால் பல துன்பங்களை அடைவார். எதையும் சீக்கிரத்தில் அறிந்து கொள்ளும் சக்தியும், சீக்கிரத்தில் மறந்துவிடும் குணமும் உடையவராயிருப்பார். குளிர், நடுக்கம், வலிகளைத் தங்கமாட்டார்கள், உடல் நலமற்றவராயும் பொருள் திரட்டும் வகையற்றவராயும் இருப்பார்கள். இதற்கு அதமப்பிரகிருதி என்பது பெயர்.
வாதபித்த கபங்களின் உருவான நிலைமைகள்
மனிதஉடல் ஊட்ட பொருள்கள், அணுக்கள், மலங்கள் ஆகியவற்றால் ஆனது. ஊட்டப்பொருள்கள் வாத, பித்த, கபமென மூன்று வகையாகும். தாதுக்கள் வெண்குருதி, இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்புட்கரு, உயிரணு என ஏழுவகையாகும். மலங்கள்: சிறுநீர், வியர்வை, மலம் என மூன்று பிரிவுகளாகும்.
உடல் நலத்தின் பாதுகாப்புக்கு இவைகளை அனைத்தினுடைய இயற்கையான நிலைகள் காப்பாற்றப்படல் அவசியம். எப்போது இவற்றின் ஒழுங்குநிலை குலைகிறதோ அப்போது தான் நோய் உண்டாகும். நோயில் அளவுக்கு மிஞ்சிய நிலையையே மக்கள் வாத பித்த கபமென எண்ணுகின்றனர்.
முதலில் நோயின் காரணங்களை நீக்கி குற்றம் களைந்து தாதுக்களை அவற்றின் சரியான நிலைக்கு கொண்டு வருவது தான் சிகிச்சையின் முக்கிய தத்துவமாகும். இவற்றில் எதாவது ஒன்று கூடினால் அதை குறைக்கவும் குறைந்தால் உயர்த்தவும் வேண்டியதே சிகிச்சை. இதை தேவைக்குகேற்றவாறு மருந்து, உணவு, வாழ்க்கைப்பழக்கம் இவைகளை ஒழுங்குபடுத்ததால் செய்யலாம்.
- வாயு வறட்சியாகவும், சீதள தன்மையுடையதாகவும், முறப்பாயும், சுறுசுறுப்பாயும் இருப்பதோடு சிவந்த செவ்வான நிறத்தையுமுடையது.
- பித்தம் பிசுபிசுப்பாயும், எண்ணெய் பசையுடன் உஷ்ணம் செய்வதாயும், சுறுசுறுப்பாயும், கசப்பாயும், பசுமை அல்லது மஞ்சள் நிறமாகவுமிருக்கும்.
- கபம் குழகுழப்பாயும், அசைவற்றதாயும், வழுவழுப்பையும், பாரமாயும், குளிர்ச்சியாயும், மிருதுவாயும், இனிப்பாயும், வெண்மையாயுமிருக்கும்.
சில சமயங்களில் இத்தோஷங்கள் அளவு குறைந்தால் அக்குறிகள் தோன்றும். அப்போது வாதபித்தம், வாதகபம், பித்தகபம் ஏற்பட்டதென்றோ அல்லது மூன்று தோஷங்களும் பதித்திருக்கிறதென்றோ கூறலாம். நிலைகுலைவையறிந்து ஏற்ற சிகிச்சை செய்ய வேண்டியது மருத்துவரின் கடமையாகும்.
வாத நோய்கள்
நகச்சிதைவு, தோல்வறட்சி, அங்கம் மரத்து போதல், உடலின் தொழில் மந்தம், விறைப்பு, தசைப்பிடிப்பு தசை இறுகல், மலச்சிக்கல், எச்சங்கள் வறட்சி, நாட்பட்ட அரிப்பு, காது கேளாமை, மூர்ச்சை, நித்திரையின்மை, நடுக்கும், கொட்டாவி, பிதற்றல், மூளை நரம்புகளின் நிலைகுலைவால் ஏற்படும் கோளாறுகள் இவை நிலைகுலைந்த வாதத்தின் அறிகுறிகளாகும். வாயில் துவர்ப்பு சுவையும். இவ்வாத நோய்கள் 80க்கு மேலும் இருக்கலாம்.
பித்த நோய்கள்
உடலில் அதிக வெப்பம், புளிப்புச்சுவை, உடலில் எரிச்சல், அதிக வியர்வை, கொப்புளங்கள், மஞ்சள் நிறக்காமளை, சுவாச நாற்றம், ஆசன எரிவு, மயக்கம், பார்வை மந்தம், சிறுநீர், கண்கள், நகம் மஞ்சள் நிறமாதல் முதலியன நிலைகுலைந்த பித்தத்தின் அறிகுறிகளாகும். இப்பித்த நோய்கள் 40 க்கு மேலும் இருக்கலாம்.
கப நோய்கள்
பசி, மந்தம், சோர்வு, அதிக தூக்கம், உடல் பலவீனம், வாய்நீர் சுரப்பு மிகுதி, மலப்பொருள் கூடுதல், குரல் விகாரம், பலவீனம், இரத்தக் குழல்கள் நிரம்பியது பூல் இருத்தல், கழுத்தில் நெறி கட்டுதல், நமச்சல், தோல் வெழுப்பு, சிறுநீர், கண், நகம் வெழுத்தல் முதலியன நிலைகுலைந்த கபத்தின் அறிகுறிகளாகும். இக்கபநோய்கள் 20 க்கு மேலும் இருக்கலாம்.
மனித உடலில் வாத, பித்த, கப மிகுதி, குறைவால் ஏற்படுவதே நோய் எனப்படும். சிகிச்சையின் நோய்க்கும் இவற்றின் நிலையை சரிபடுத்துவதே ஆகும். நோய் காரணங்களை நீக்குவதாலும் வேலை, இளைப்பாற்றுதல், துக்கம் முதலிய பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுவதாலும் உணவு அல்லது மருந்தின் சிகிச்சையிலும் இவை நிறைவேறுகின்றன.
ஆசன மூலம் குடல் சுத்தி செய்தல் வாயுவை கண்டிப்பதற்கும் பேதி கொடுத்தால் பித்த சாந்திக்கும், வாந்தி உண்டுபண்ணால் கபத்தை நீக்கவும் சிறப்பானவை. வாயுவை சிற்றாமணக்கு நெய்யாலும், பித்தத்தை நெய் சர்க்கரையாலும், கபத்தை தேனாலும் கரைக்க சிறந்தவையாகும். கபநோய்களுக்கு உஷ்ண வீரிய சிகிச்சைகளும், பித்த நோய்களுக்கு சீதள சிகிச்சைகளும், வாத நோய்களுக்கு சமன சிகிச்சைகளும் சிறந்தவைகளாகும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்புச் சுவையுள்ள பொருள்களால் வாதமும், இனிப்பு, கைப்பு, துவர்ப்புச் சுவையுள்ள பொருள்களால் பித்தமும், துவர்ப்பு, கார்ப்பு, கைப்புச் சுவையுள்ள பொருள்களால் கபமும் தணிக்கை பெறும். தோஷ நிலைகுலைவு, மருந்துகளின் குணங்கள், உணவுப் பொருள்களின் தன்மைகள் முதலியவற்றை நன்கு உணர்ந்து தக்கவாறு சிகிச்சை செய்யவேண்டும்.
மருந்துச் சிகிச்சை, இரணசிகிச்சை மூன்று வகைப்படும். அவை உள் சுத்தி, புறச்சுத்தி, இரணசிகிச்சை என்பனவாகும். மருந்துச் சிகிச்சைகள் மேலும் அறுவகைப்படும். வளர்த்தல், பெருக்குதல், குறைத்தல், வழுவழுப்பாக்கள், வறட்சித்தல், வியர்வை உண்டாக்கல், சுருக்குதல் முதலியனவாகும். 1. வாந்தியுண்டுபண்ணல் 2. பேதியுண்டாக்கல் 3. ஆசனமூலம் குடல் சுத்தி செய்தல் 4. நாசியில் நசியமிடுதல் 5. இரத்தத்தை வெளியாகுதல் முதலிய ஐந்து நோய்களையும் சரியான முறையில் போக்குவது முக்கியமாகும்
எல்லா மருந்து சிகிச்சைகளும் சூடுசெய்வித்தல், குளிர்வித்தல் ஆகிய இருமுறைகளில் அடங்கும் திரிதோஷங்களின் அளவு மிகுதி குறைவுக்கு ஏற்றவாறு காரணங்களை அதிகப்படி சேர்ப்பதாலும், குறைப்பதிலும் குணப்படுத்த வேண்டும். ஒத்த தன்மை சேர்த்தால் மிகுதியாகும். வேறாய தன்மைகள் சேர்த்தால் குறையும். இதுவே பொதுவான சிகிச்சை விதியாகும்.
- வலி நீக்குதல்
- இயற்கையான குரலொலி
- தோலின் பழைய நிறம்
- தசையணுக்கள் வளர்ச்சி
- வலிமை மிகுதி
- உணவில் விருப்பம்
- நல்ல சுவை
- உணவு நன்கு சீரணித்தல்
- வழக்கமான தூக்கம்
- துயில் குலைக்கும் கனவுகளின்மை
- குதூகலமாக துயில்
- சிறுநீர், மலம், விந்து முறைப்படி கழிப்படல்
- மூளை அறிவு ஐம்பொறிகள் சரிவர வேலை செய்தல்
முதலியவற்றால் நோயாளி மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க வேண்டும். எவரும் திருப்தியடையாமல் உண்மையில் மகிச்சியடைய இயலாது. திருப்தியும், மகிழ்ச்சியும் நீண்ட ஆயுளும் பெற்ற வாழ்க்கையே சித்த மருத்துவத்தின் குறிக்கோளாகும்