வேப்பம்பூ சித்திரையில் மலர்ந்து மணம் பரப்புவது. இது கொத்து கொத்தாக மலரும் இயல்பு உடையது. அதிக மருத்துவ பயனுடையது. சித்திரை முதல் நாளில் வேப்பம்பூ, மாங்காய், வெல்லம், உப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து எல்லோரும் உண்பது வழக்கம். வாழ்வில் இன்பம், துன்பம் போன்ற ஏற்றத்தாழ்வுகள் வரும் அதை எல்லாவற்றையும் சமாளித்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதற்காவே இப்படி எல்லா சுவையும் கலந்து சித்திரை நாளில் உண்பது தமிழரின் மரபு.

பித்தத் தெழுந்த பெருமூர்ச்சை நாத்தோடஞ்
சத்தத் தெழுவமனத் தங்கருசி – முற்றியகா
லேப்பமல கீட மிவையேகு நாட்சென்ற
வேப்பமல ருக்கு வெருண்டு.

மருத்துவ பயன்கள்

  • ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் 10 கிராம் வேப்பம்பூவை போட்டு சூடு ஆறும் வரும்வரை மூடி வைத்து வடிகட்டி தினமும் இருவேளை சாப்பிட அக்கினி மந்தம் தீரும். உடல் வலிமை பெறும். கல்லீரல் இயக்கத்தை சீர்படுத்தும்.
  • தண்ணீரை கொதிக்கவைத்து அதில் வேப்பம்பூவை போட்டு அந்த ஆவியை தொண்டைக்குள் படும்படி செய்தால் தொண்டைப்புண் ஆறும்.
  • சிறுவர்களுக்கு வேப்பம்பூ கஷாயத்துடன் சர்க்கரை சேர்த்து கொடுத்தால் குடல் கிருமிகள் அழியும்.
  • மோரில் சிறிது உப்பு சேர்த்து இரவில் வேப்பம்பூவை போட்டு காலையில் நன்றாக உலர்த்த வேண்டும். இதுபோல் மூன்று நாட்கள் செய்து பாட்டிலில் அடைத்து வைத்து கொண்டு நல்லெண்ணையில் பொரித்து உணவுடன் சேர்த்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் செய்து அதிகாலை வெறும் வயிற்றில் குடித்துவர மெலிந்த உடல் பலம் பெறும்.
  • வேப்பம்பூவை நெய்விட்டு வதக்கி தேவையான அளவு உப்பு, புளி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கி சாப்பிட உடலில் அதிகரித்த பித்தம் சமப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 6 =