மூலிகைகள்
உடலுக்கு உறுதியை தரும் வேர்க்கடலை
வேர்க்கடலை பட்டாணி போன்றே கொட்டைவகை தாவரமாகும். அதன் பருப்பு அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இந்தியா, சீனா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.
வேர்கடலை “நிலக்கடலை, மணிலாப்பயறு” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட அவித்தோ, வறுத்தோ அல்லது வெல்லப்பாகுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.
மெத்த வினிப்பாகும் மேவுரத்த மூலமறும்
பித்த வனிலம் பிறக்குங்காண் – இத்தரையில்
தீர்க்கவிந் தூறுஞ் சிறியஉடற் றன்பருக்கும்
வேர்க்கடலை தனுண்ண வே
குணம்
வேர்கடலையால் இரத்த மூலம் போம். தாது புஷ்டி, தேகப்பெருக்கம், பித்தவாயு உண்டாக்கும் என்க.
மருத்துவ பயன்கள்
- வேர்க்கடலை தேக பெருக்கத்திற்கு உதவுகிறது, ஆண்மையை அதிகரிக்கிறது.
- இதை அவித்து சாப்பிடுவதால் இரத்த மூலத்தை சரியாக்குகிறது. இதை அவிக்கும் பொழுது சிறிதளவு வேப்பிலை சேர்த்துக்கொள்வது நல்லது.
- இது மலச்சிக்கலை நீக்கி, மலத்தை இலகுவாக வெளியேறச்செய்கிறது.
- வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- வேர்க்கடலை குழந்தைகளுக்கும் சிறந்த உணவாகும். மேலும் புரதச்சத்து இல்லாதவர்களுக்கும் சிறந்த உணவாக விளங்குகிறது.
- இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.