சிந்தனைத் திறனை அதிகரிக்கும் வல்லாரை
வட்டமாகவும் அரை வட்ட வெட்டுப்பற்களுடன் கை வடிவ நரம்பு அமைப்புடனும் நீண்ட காம்புடைய ஆழமான இதயவடிவ இலைகளைக் கொண்ட கணுக்களில் வேர்விட்டுத் தரையோடு படரும் சிறு செடிகள். தமிழகமெங்கும் ஆற்றுப்பாசன நிலங்களில் தானே வளர்கின்றன. கருவல்லாரை என்ற ஓரினமும் மலைப்பாங்கான இடங்களில் வளர்கின்றன . இலையே மருத்துவப் பயனுடையவை.
அக்கரநோய் மாறு மகலும் வயிற்றிழிவு
தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும்-பக்கத்தி
லெல்லாரை யும்மறுந்தென் றேயுரைத்து நன்மனையுள
வல்லாரை யைவளர்த்து வை.
குணம்
நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், வியர்வைப் பெருக்கியாகவும், நாடி நடை மிகுத்து உடல் வெப்பம் உயர்த்தியாகவும் தாது பலம் பெருக்கியாகவும் செயற்படும்.
பயன்கள்
இலையை உலர்த்தி பொடித்து 5 அரிசி எடை காலை, மாலை நெய்யில் கொள்ள வாதம், வாயு, அண்ட வீக்கம், யானைக்கால், குட்டம், நெறிக்கட்டி, கண்ட மாலை, மேகரணம், சூதகக் கட்டு தீரும். மூளை பலத்தையும், சுறுசுறுப்பையும், சிந்தனைத் திறனையும் தரும்.
சம அளவு தூதுவேளையுடன் கசக்கிய வல்லாரை சாறு 5, துளி அல்லது இரண்டின் பொடி 1 தேக்கரண்டி 50 மி.லி காய்ச்சிய பாலில் கொடுத்து வர க்ஷயரோகத் தொண்டைக் கம்மல், சுவாச உறுப்புகளில் சளித் தேக்கம் நீங்கும்.
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்டநாள் கட்டி வர யானைக் கால், விரைவாதம், நெறிக்கட்டி, அரையாப்பு, கண்டமாலை தீரும்.
கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டைக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள எரிச்சல் தீரும்.
வல்லாரை சாற்றில் 7 முறை ஊற வைத்து உலர்த்திய அரிசித் திப்பிலி மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக்கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன்படும்.