செம்பரத்தையின் மருத்துவ பயன்கள்
செம்பரத்தம் பூவின் ஆங்கிலப் பெயர். ‘Hibiscus Rosa Sinensis ‘ என்பதாகும்.
சைனா ரோஸ் என்றும் அழைப்பார்கள். வீட்டுத் தோட்டங்களிலும் – பூங்காக்களிலும் – கோயில்களிலும் இச் செடியை காணலாம். இதன் இலையை மென்றால் வழ வழப்பாக இருக்கும். பூ நல்ல ரத்தச் சிகப்பாக – அழகாக இருக்கும். பெண்கள் தலையிலும் சூடிக் கொள்வார்கள்.
இதில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று ஒற்றை வரிசையுள்ளது. மற்றொன்று அடுக்கு செம்பரத்தை என்ற இரட்டை வரிசை இதழ்களை உடையது.
செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடு
வம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும் – வெம்பும்
பெரும்பா டிரத்தபித்த பேத மகற்றுங்
கரும்பா மொழிமயிலே காண்.
குணம்
செம்பரத்தம்பூ, மேகவெள்ளை, பிரமிய மேகம், ரத்தப்பிரமேகம் , பெரும்பாடு இவைகளை நீக்கும்.
பயன்கள்
இதன் இலை – பூ – வேர் முதலியவை மருத்துவப் பயன் உடையது. நாற்பது நெல்லிடை செம்பரத்தம் பூவில் ஒரு நெல்லிடை தங்கச் சத்து நிறைந்துள்ளது. தங்கப் பற்பம் சாப்பிட்டால் சிறு நீரகம் கெட்டு விடும். ஆனால் இந்தப் பூவை திசைரி சாப்பிட்டு வந்தால் உடல் அழகாக பொன்னிறமாக மாறும்.
பூவை உலர்த்தி பொடி செய்து டீ போல் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். பாலில் சாப்பிட்டால் உடல் ஊட்டம் பெறும். சிறுவர்களுக்கு உடம்பு பெருக்கும்.
இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட வெள்ளை – வெட்டை நோய் குணமாகும். இதன் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலை – மாலை குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும். அதாவது இதய பலவீனம் – மார்பு வலி முதலியவை தீரும்.
இதன் பூவை சுத்தமாக கழுவி நெய்யில் வதக்கி பெண்கள் காலை – மாலை சாப்பிட்டு வந்தால் பெரும் பாடு குணமாகும். 100 கிராம் பூக்களை தண்ணீர்ல் போட்டு பிசைந்து வடிகட்டி – சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வர மேக வெள்ளை – ரத்த பிரமேகம் குணமாகும். குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கணைச் சூட்டை குறைக்கும்.
செம்பருத்தம் பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடி கட்டி வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தடவி வர மூளை குளிர்ச்சி அடையும். மயிர் கால்கள் ஊட்டம் பெற்று முடி கருத்து வளரும். இள நரை – கண்ணெரிச்சல் தீரும்.
இச் செடியின் வேறுடன் ஆடா தோடை இலை சேர்த்து கொதிக்க வைத்து கொடுக்க இருமல் தீரும். மலராத மொட்டுக்களை உலர்த்தி இடித்து தூள் வைத்துக் கொண்டு தண்ணீரில் கலக்கி சாப்பிட்டால் சிறு நீர் எரிச்சல் நீங்கும். நெய்யில் சாப்பிட ஆண்மை பெருகும்.
நிழலில் உலர்ததப் பட்ட 100 கிராம் பூக்களை ஒரு ஜாடியில் போட்டு அதில் 50 கிராம் தேன் விட்டு – 10 கிராம் ஏலரிசியை பொடித்துப் போட்டு மூடி 10 நாட்கள் வைத்திருந்து 11 – வது நாள் வெயிலில் வைத்து பிறகு எடுத்து காலை – மாலை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர கணைச் சூடு – எலும்புருக்கி – மேக கங்கை – கல்லீரல் வீக்கம் குணமாகும்.