மூலிகைகள்
உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கும் சீரகம்
சீரகம் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய உணவு பொருளாகும். கார உணவுகளுக்கும் அசைவ உணவுகளுக்கும் கண்டிப்பாக சீரகத்தை பயன்படுத்துவார்கள் அது சீரணசக்திக்கும் நச்சு பொருட்கள் வெளியேறவும் பயன்படுகிறது.
வாந்தி யருசி குன்மம் வாய்நோய் பிலீகமிரைப்
பேந்திருமல் கல்லடைப்பி லாஞ்சனமூட் – சேர்ந்தகம்ம
லாசனகு டாரியெனு மந்தக் கிரகணியும்
போஐனகு டாரியுண்ணப் போம்
குணம்
சீரகத்தினால் வாந்தி, அரோசகம், வயிற்று வலி, முக ரோகம், காசம், வாதாதிக்கம், பீநசம், பித்தம் இவைகள் விலகும்.
பயன்கள்
- சீரகத்தினால் உடல் உறுதி பெறும், கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
- ஒரு கிராம் அளவு சீரகத்தை பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து தினம் 2 வேளை சாப்பிட்டு வர பித்தம், வாயு, உதிர்ச்சிக்கல் ஆகியவை குணமாகும்.
- சீரகத்தை நன்கு அலசி காயவைத்து எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச்சாறு, நெல்லிக்காய் சாறு இவைகள் ஒவ்வொன்றிலும் 4 அல்லது 5 தடவை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட பித்தம், அசீரணம், அரோசகம் மயக்கம், கண்ணெரிச்சல், வயிற்று வலி, மூலக்கொதிப்பு, சீதபேதி ஆகிய நோய்கள் குணமாகும்.
- சீரகத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
- உடல் உள் உறுப்புகளை சீராக இயங்க வைத்து, உடலுக்கு வலிமையை தருகிறது.