மூலிகைகள்
சீந்தில் கொடி மருத்துவ பயன்கள்
சீந்தில் கொடி இதய வடிவ இலைகளை கொண்ட ஏறுகொடி இனம். தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் காணப்படும். கொடியின் வேரை அகற்றினாலும் கொடியின் விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும்.
சோமவல்லி, சாகாமூலி, அமிர்தவல்லி, சஞ்சீவி, ஆகாசவல்லி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
சீந்திற் கிழங்கருந்தத் தீபனமா மேகவகை
போந்த வுதிரபித்தம் பொங்குசுர – மாந்த
மதிசாரம் வெய்யகண மாம்பலநோ யோடே
கதிவிஷமுங் கெட்டுவிடுங் காண்
குணம்
சீந்திற்கிழங்கு அல்லது சீந்திற்கொடி சர்வ மேகம், ரத்தபித்தரோகம், சுரம், மந்தாசுரம், பேதி, பித்தகணம், சர்பவிஷம் இவைகளை போக்கும். இன்னும் இதனால் பசிதீபனம் உண்டாம் என்க
பயன்கள்
- சீந்தில் கொடிகளை நன்றாக காயவைத்து பொடி செய்து காலை, மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
- சீந்தில் கொடி பொடியை பனகற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் (சர்க்கரை நோய்) தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, உடல் மற்றும் கைகளில் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.
- நெற்பொரி, சீந்தில் கொடி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி காலை, மாலை 50 மிலி குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.
- சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உறுப்புகளை பலமடைய செய்யும். பிற மருந்தின் சேர்க்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, மூர்ச்சை ஆகிய நோய்களை தீர்க்கலாம்.