குமரி (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன்கள்
சதைப்பற்றாகவும், விளிம்பில் முள்ளும் உள்ள மடல்களை உடைய கற்றாழை இனம். நடுவில் நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டில் பூங்கொத்து காணப்படும். சோற்றுக்கற்றாழை எனவும் அழைக்கப்பெறும். தமிழகமெங்கும் காணப்படுகிறது.மடல் வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கிக் குழம்பாகச் சமைப்பதுண்டு. இதை உண்பதால் தாது வெப்பு அகன்று தகந்தணியும்.
பொல்லாமே கங்கபம்பு ழுச்சூலை குஷ்டாச
மல்லார்மத் தம்பகந்த ரங்குன்ம – மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சர் கிறிச்சாமு
மாகு மரிக்கு மருண்டு.
குணம்
நறுங் கற்றாழைக்கு வாதமேகம்,கபகோபம், கிரிமிக்குத்தல், பெருவியாதி, மூலம், உன்மாதம், பகந்தரம்,வயிற்று நோய், தினவுள்ள பித்தகிரிச்சரம் ஆகிய இவைகள் போம் என்க.
மருத்துவப் பயன்கள்
இதன் ஒரு மடலைச் சீவி மேற்றோல் கழித்து உள்ளிருக்கும்படியான சோற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் தண்ணீர் விட்டு ஏழு முறை கழுவி சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிடத் தேகத்திலுள்ள வெப்பம் தீரும். கண், கை, கால் முதலிய அங்கங்களிலுண்டான எரிச்சல் முதலியவைகள் நீங்கும். நீர் எரிச்சலையும் குணமாக்கும்.
வேரை அலசிப் பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடித்து 1 மேசைக்கரண்டி (15 மி லி) பாலுடன் கொடுக்கச் சூட்டு நோய்கள் தீரும், ஆண்மை நீடிக்கும்.
ஒரு கிலோ விளக்கெண்ணெய் 1கிலோ 10 முறை கழுவிய சோற்றுக்கற்றாழைச் சோறு, அரைகிலோ பனங்கற்கண்டு, அரைக்கிலோ வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றைக் கலந்து நீர்கண்டக் காய்ச்சி (குமரியெண்ணெய்) காலை மாலை 15 மி லி கொடுக்க மந்தம், வயிற்றுவலி, ரணம், குன்மக்கட்டி, பசியின்மை, புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.காலை மாலை 1 தேக்கரண்டி (5 மி லி) கொடுத்து காரம் புளி நீக்கி உணவு கொள்ள மேக நோய்ப்பலவீனம், எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் நீர் போதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, உறுப்புகளில் அக, புற ரணங்கள், சீழ்வடிதல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும்.