கபம், உட்சூடு, வாதம் போன்ற நோய்களை குணமாக்கும் விஷ்ணு கிராந்தி

செய்யமரி லின்கிராந்தி தீராத வல்லசுரத்
தைய மறுக்கு மனற்றணிக்கும் – பையவரு
காச மிருமலையுங் கட்டறுக்கும் வாதத்தா
லூசலா டும்பிணிபோக் கும்
தரையோடு படர்ந்து வளரும் சிறிய செடி வகை சிறு இலைகளைக் கொண்டது. வட்டமான நீல நிறமான சிறு மலர்களை உடையது. அரிதாக வெண்ணிற – செந்நிற மலர்களும் காணப்படுவதுண்டு. தமிழகமெங்கும் தானே வளர்கிறது முழு செடியும் மருத்துவப்பயன் உடையது.
இதன் சமூலம்(வேர், இலை, தண்டு, பூ அனைத்தும்) அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு தயிரில் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும். காரம் புளி நீக்க வேண்டும்.
விஷ்ணு கிராந்தி ஓரிதழ்த்தாமரை – கீழாநெல்லி சம அளவு அரைத்து பாக்கு அளவு சாப்பாட்டிற்கு பிறகு காலை – இரவு இரண்டு வேலையும் சாப்பிட்டு பால் குடித்துவர நரம்புத் தளர்ச்சி, வெட்டை சூடு, மறதி போன்ற நோய்கள் குணமாகும். உடல் பலம் உண்டாகும்.
சமூலத்தை நெல்லிக் காய் அளவு 90 நாட்கள் சாப்பிட்டு வர கண்டமாலை(கழுத்தை சுற்றி வீக்கம்) நோய் குணமாகும்.
5 கிராம் அளவு இதன் சமூலத்தை பால் விட்டு அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி காலை – மதியம்- மலை 3 வேளை சாப்பிட்டு வர சீத பேதி – காய்ச்சல் – மேக நோய் எலும்புக்குக்கி – இளைப்பு – இருமல் – வாதம் – பித்தம் தொடர்பான நோய்கள் குணமாகும். கண்களுக்கு பிரகாசம் உண்டாகும்.
விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும்.
இதன் சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும்.
இதன் இலையுடன் கண்டங்கத்தரி, பற்பாடகம், தூதுவேளை இலை சம அளவாக எடுத்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி 10 மில்லி அளவு சாப்பிட்டு வர டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.
விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும்.
இதை இலையுடன் துளசி, ஆடாதோடை, தும்பை, வெள்ளறுகு, சம அளவு சேர்த்து புட்டு போல் அவித்து எடுத்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட நீண்ட நாள் காய்ச்சல் விஷக் காய்ச்சல் குணமாகும்.
விஷ்ணு கிராந்தி ஆவாரை வேர்ப்பட்டை ஆகிய இரண்டும் சம அளவு கலந்து அரைத்து எலுமிச்சை பழ அளவு பாலில் கலந்து சாப்பிட சிறு நீரில் இரத்தம் கலந்து போகுதல் குணமாகும்.
இதன் இலையுடன் ஓரிதழ்தாமரை சேர்த்து பால் விட்டு அரைத்து – மாதவிடாய் கண்ட பெண்கள் மூன்று நாட்கள் சாப்பிட மலடு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
விஷ்ணு கிராந்தி சமூலம் நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 5 கிராம் அளவு பாலில் தினசரி காலை மாலை சாப்பிட வாத நோய் தீரும்.