அழகு

இளநரை மறைய சிறந்த மருத்துவ முறைகள்

இளநரை மறைய

நரையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வயோதிகத்தில் இயற்கையாக வரும் நரை. இரண்டாவது இளநரை. இதை சிலர் பித்தநரை என்று கூட  சொல்வார்கள். நரை என்பது பொதுவாக பரம்பரையைப் பொறுத்தது. பெண்ணுக்கு 30 வயது தொடக்கத்திலும் ஆணுக்கு 40 வயதிற்கு மேலும் நரை உண்டாவது இயற்கை.

நமது சருமத்திற்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (Melanin) என்னும் சுரப்புக் குறைவதே அடிப்படைக் காரணம். இந்த மெலனின் சுரப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இளநரையை நீக்கிக் கொள்ளலாம். ஆனால் முதுமையில் வரும் நரையை தள்ளிப் போடலாம். அதை முற்றிலும் நீக்குவது என்பது முடியாத விசயம்.

மனக்கவலை, நிம்மதியின்மை, தூக்கமின்மை மன இறுக்கம் திடீர் அதிர்ச்சி ஓயாத சிந்தனை கடின உழைப்பு மிதமிஞ்சிய ஆசைகள், தனது நோக்கம் நிறைவேறாத ஏக்கம், மனவெறுப்பு, சதா கவலை இது போன்ற மன இயல்கூறுகளும் இள நரையை விரைவில் உண்டாக்கி விடும்.

இளநரையை பித்த நரை என்றும் சொல்வதைக் கேட்கிறோம். பித்த ஆதிக்கம் உள்ள உணவுகளை அதிகமாக உண்பதாலும் வைட்டமின் ‘B’ சத்து அல்லது ‘K’ சத்து குறைவதாலும் உவர்ப்பு, காரம், புளிப்பு பதார்த்தங்களை மிதமிஞ்சி உண்பதாலும் தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதாலும் இளநரை ஊக்குவிக்கப்படுகிறது எனலாம்.

உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், தலைக்கு சரியாக எண்ணெயிட்டு பராமரிக்காததாலும் இளநரை ஏற்படும். பொதுவாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கு நரை விரைவில் வராது. ஆனால் நிழலில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு விரைவில் நரை வருவதை அனுபவப்பூர்வமாக அறியலாம்.

செம்பட்டை, இளநரை நீங்க

நில ஆவாரை இலையுடன் மருதோன்றியிலைக் கூட்டி அரைத்துத்தடவச் செம்பட்டை முடி கருக்கும்.

பூக்காத கொட்டைக் கரந்தைப் பொடியுடன் கரிசலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து 3 கிராம் அளவாகக் காலை, மாலை தேனில் சாப்பிட்டு வர இளநரை மாறும்.

இளநரை நீங்க

நெல்லிக்காய்ச் சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து இளநரைக்கு தேய்க்கலாம். சீரகம், வெந்தயம், வால் மிளகு இவைகளைச் சமனாக எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வர இளநரை குறையும்.

நெல்லி வற்றல், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளித்து வர இளநரை போகும். மேலும் கரிசலாங்கண்ணி சாற்றையும், கடுக்காய் ஊறிய நீரையும் ஒன்றாக கலந்து தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க முடி கருமை பெரும்.

இளநரையை தவிர்க்க மருதாணியுடன் நெல்லிக்காய், தயிர், தேயிலை டிக்காஷன் இவைகளை போதுமான அளவு கலந்து அக்கலவையை முட்டை வெண் கருவில் குழப்பி நரை முடி பகுதியில் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இது முடியில் சாயம் போல் ஒட்டிக்கொண்டு லேசான இளநரை முடிகளை கருமையாக்கிவிடும்.

நெல்லிக்காய் சாற்றையாவது கரிசலாங்கண்ணி சாற்றையாவது, வல்லாரை சாற்றையாவது சமன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து அந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர விரைவில் நரை விழாது.

Leave a Comment

six + 13 =

error: Content is protected !!